Tuesday, February 14, 2017

இறைவனின் இறுதித் தீர்ப்பு....!February 14, 2017

வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இன்று நாடே அலசிக்கொண்டு இருக்கும்போது... இறைவனின் தீர்ப்பு குறித்தும் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. இல்லையா..?

ஒவ்வொரு வழக்கும் இருமுறை விசாரிக்கப்படும். ஆம். முதல் தடவை இவ்வுலகில். பின்னர் மறுமையில். மறுமை நாளின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு முன்னால் இவ்வுலகின் ஒவ்வொரு தீர்ப்பும் மறுபடியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அப்போது வெளிவருமே அதுதான் உண்மையான தீர்ப்பு. முழுமையான தீர்ப்பு.

இந்நேரம் ஏனோ அஷ்ஷெய்க் ராஷித் அல் கனூஷி அவர்களின் வாழ்வு நினைவில் நிழலாடுகிறது. இன்றைய தீர்ப்புக்கும் எனது நினைவலைகளுக்கும் தொடர்பு இருக்குமா தெரியாது.

அஷ்ஷெய்க் ராஷித் அல் கனூஷி அவர்கள் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு.. மரண தண்டனை விதிக்கப்பட்டு.. நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அந்நேரம் அவருக்கும் நீதிபதிக்கும் இடையே நடந்த உரையாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது.

இதோ அந்த உரையாடல்...

கனூஷி: "நீதிபதி அவர்களே! என்னுடைய இரத்தத்தைக் குடிப்பதற்கு நீங்கள் துடியாய் துடிக்கிறீர்கள். உங்கள் அவசரம் எனக்குப் புரிகிறது”.

நீதிபதி: "உங்கள் இயக்கத்திற்கும் வன்முறைக்கும் தொடர்பு இருக்கிறது”.

கனூஷி: "வன்முறையாளர் என்ற வீண்பழியைத் தவிர வன்முறைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது”.

நீதிபதி: "இவ்வளவு பெரிய இயக்கத்தை நடத்துவதற்கு பணத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?”

கனூஷி: "இஸ்லாமிய இயக்கங்களை நடத்த பணம் ஒருபோதும் மூலதனமாக இருந்ததில்லை. கொள்கைதான் மூலதனம். நானும் எனது இயக்கத்தின் முன்னணித் தலைவர்களும் எமது கடைசி உடமையைக் கூட விற்று இயக்கத்திற்கு செலவு செய்கிறோம்”.

நீதிபதி: "உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டிற்கு மரண தண்டனை என்பதை அறிந்திருப்பீர்கள். வேறு ஏதேனும் சொல்ல விரும்புகின்றீர்களா?”

கனூஷி: "அல்ஹம்து லில்லாஹ்! யா அல்லாஹ்! உனக்கு உளமார்ந்த நன்றி. நீதிபதி அவர்களே! நீங்கள் நடத்திய இந்த விசாரணையோடு இந்த வழக்கு முடிந்துவிடப்போவதில்லை. இன்னும் இரண்டு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும். ஒன்று, நாளைய தலைமுறையின் மக்கள் மன்றத்தில். அப்போது மக்கள் ஒரு தீர்ப்பை வழங்குவார்கள்.

இரண்டாவதாக, நாளை மறுமையில் நீதிபதிகளுக்கெல்லாம் மாபெரும் நீதிபதியான அல்லாஹ்வின் முன்னால் நிச்சயம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும். அல்லாஹ்வின் தீர்ப்பே நீதியானது. நிலையானது. அங்கு வானவர்களே சாட்சியாளர்களாக இருப்பார்கள்”.

பின்னர் அஷ்ஷெய்க் ராஷித் அல் கனூஷி அவர்கள் தூக்கிலப்படுவதற்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர் (1988 ஆம் ஆண்டு) தூனிசியாவின் ஜனாதிபதி சித்த சுவாதீனமிழந்ததும், ஷெய்க் கனூஷி அவர்கள் விடுதலை செய்யப்பட்டது எல்லாம் தனி வரலாறு.

உறவுகளே...! மறுமை தீர்ப்பை மறக்காதீர்கள். இறைவனின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பு எனும் நினைவு என்றும் நம் மனதில் பசுமரத்தாணி போல் இருக்கட்டும்....!

Friday, February 3, 2017

இஸ்லாத்தின் அழைப்பு மொழி..!!சமீபத்தில் படித்த நூல்களிலேயே மிகச் சிறந்த நூல் "அழைப்பாளர்களின் அழைப்பு மொழியில் இஸ்லாம்” எனும் யூஸுஃப் அல்கர்ளாவியின் நூல்.

இஸ்லாத்தின் அழைப்பு மொழி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும், எதைப் பேச வேண்டும்? எவ்வாறு பேச வேண்டும்? என்பது குறித்தும் மிகச் சிறப்பாக விவரித்துச் செல்கிறது அந்த நூல்.

அதன் ஒரு பகுதி...

முஸ்லிம்களுக்கு சொல்லப்படவேண்டியவை சிலபோது முஸ்லிமல்லாதவர்களுக்குப் அவசியமற்றவையாக இருக்கலாம். ஒரு புதிய முஸ்லிமுக்கு சொல்லப்பட வேண்டியவை, பி்றப்பிலேயே முஸ்லிமாக இருப்பவருக்கு தேவையற்றதாக இருக்கலாம்.

நல்ல மனிதருக்குச் சொல்லப்பட வேண்டியவற்றை ஒரு மோசமான மனிதரிடம் பேசுவது பொருத்தமற்றது.

முஸ்லிம் பெரும்பான்மை சமூகத்தில் வசிப்பவருக்குச் சொல்லப்பட 
வேண்டியவை, முஸ்லிம் சிறுபான்மையாக இருக்கும் சூழலுக்கு பொருத்தமற்றதாக இருக்கலாம்.

பெண்களுக்குச் சொல்லப்பட வேண்டியவற்றை ஆண்களுக்குச் சொல்வதால் எப்பயனும் இல்லை.

பணக்காரர்களுக்குச் சொல்ல வேண்டியதை ஏழைகளுக்கு எடுத்துரைப்பதால் நன்மைகள் விளையாது.

போர் சூழலில் பேசவேண்டியதை அமைதி நிலவும் சூழலில் பேசத் தேவையில்லை. பூகோளம் கிராமமாக ஆகிவிட்ட யுகத்தில் 18ஆம் நூற்றாண்டுக் கதைகளை மீட்டுவது அறிவுடைமையே அல்ல.

ஒரு துறையைத் உயர்த்தி மற்றொரு துறையைத் தாழ்த்தும் வகையில் பேசுவது இஸ்லாமிய மொழியல்ல..

அதேநேரம், தான் பேசாத ஒரு துறை பற்றி மற்றொருவர் பேசுவதை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டதாகவும் எவரும் கருதிவிடக் கூடாது.

அல்லாமா யூஸுஃப் அல்கர்ளாவி

அன்ஸாரித் தோழர்களின் தியாகங்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 16-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: அன்ஸாரித் தோழர்களின் தியாகங்கள்..!!

உரை:  மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி
             (மொழிபெயர்ப்பாளர், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை)

இந்த உரையை கானொளியில் (YouTube) காண கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..
எறும்பின் குற்றம்..!எங்கு நோக்கினும் பொய். எல்லா இடங்களிலும் பொய். பொய் ஒரு குற்றமே அல்ல எனும் மனோபாவம் சமூகத்தின் அடிமனதில் கள்ளத்தனமாக உறைந்து கிடக்கிறது.

இதயங்களின் மருத்துவர் என்று அறியப்படும் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா என்ற நூலில் இவ்வாறு விவரிக்கின்றார்...

ஒருநாள் ஒரு மரத்தடியில் நிழலுக்காக நான் அமர்ந்து இருந்தேன். அப்போது அந்த மரத்தில் இருந்து ஓர் எறும்பு நான் இருக்கும் இடத்திற்கு அருகே ஊர்ந்து வந்தது. அங்கே இறந்துபோன ஒரு வெட்டுக்கிளியின் இறக்கை கிடந்தது.

அதைத் தூக்கிச் செல்வதற்காக பல முறை அந்த எறும்பு முயன்றது .கனமாக இருந்ததால் முடியவில்லை. உடனே அது தன்னுடைய வசிப்பிடத்தை நோக்கி வேகமாக திரும்பிச் சென்றது. சற்று நேரத்தில் எறும்புப் படையே வரிசையாக வந்தது. அவை அந்த இறக்கைக்கு அருகே வந்ததும் நான் அந்த இறக்கையை கையால் உயர்த்தினேன். அவை தேடின. கிடைக்காதபோது திரும்பிவிட்டன. ஆனால் அந்த முதல் எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. (அதுதான் முதல் எறும்பாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது). உடனே நான் அந்த இறக்கையை போட்டேன். அந்த எறும்பு மீண்டும் தூக்க முயற்சித்தது. முடியவில்லை. மீண்டும் தன் படைகளை கூட்டி வர சென்றது.

முதல் முறையைவிட குறைவான எறும்புக் கூட்டம் வந்தது. அருகில் வந்ததும் மீண்டும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன். அவை தேடின. கிடக்காதபோது திரும்பின. அந்த ஒற்றை எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. நான் மீண்டும் அந்த இறக்கையைப் போட்டேன். மூன்றாம முறையும் அது தனது படையை அழைக்கச் சென்றது. முதல் இரண்டு முறையைவிட குறைவாக எண்ணிக்கையில் கொஞ்சம் எறும்புகள் வெளியே வந்தன. இப்போதும் நான் அந்த இறைக்கையை உயர்த்தினேன்.

அப்போதுதான் ஆச்சரியமான ஒரு செயலைப் பார்த்தேன். அந்த எறும்புக் கூட்டம் கோபம் கொண்டன. தங்களை ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஒற்றை எறும்பை சூழ்ந்துகொண்டு அதன் கை கால்களை முறித்தன. பின்னர் வயிற்றைக் கிழித்து துண்டு துண்டாக உடைத்துப் போட்டன.(லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்)
அந்த எறும்பு இறந்தது. உடனே நான் அந்த இறக்கையை மீண்டும் போட்டேன். அதைப் பார்த்த ஏனைய எறும்புகள் கைசேதப்பட்டன.ஆயினும் காலம் கடந்துவிட்டது.

உடனே அங்கிருந்து எழுந்து சென்று எனது ஆசிரியர் இப்னு தைமிய்யா அவர்களிடம் விவரத்தைக் கூறினேன். அவர் சொன்னார்: ”அல்லாஹ் உனது பாவங்களை மன்னிக்கட்டும்! மீண்டும் இவ்வாறு செய்யாதே! பொய் உரைப்பதை பெரும் பாவம் என்று எறும்புகள் கருதுகின்றன. அல்லாஹ்வின் படைப்பில் ஆச்சரியப் படைப்பு இந்த எறும்புகள். பொய் உரைத்தால் அதற்கு என்ன தண்டனை என்று எறும்புகளுக்குக் கற்றுக்கொடுத்த அல்லாஹ் ஆச்சரியமானவன்..! பொய் உரைப்பது பெரும் தவறு எனும் சிந்தனை எறும்புகளின் உணர்வுகளுடன் கலந்துள்ளது”.

ஆயினும் மனிதர்கள்...? இங்கு பலர் பொய்யை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை...! மறுமையில் காத்திருக்கும் தண்டனைகள்தான் எவையோ..? யார் அறிவார்..?

முஹாஜிர் தோழர்களின் தியாகங்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 14-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: முஹாஜிர் தோழர்களின் தியாகங்கள்..!!

உரை:  மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி
              (மொழிபெயர்ப்பாளர், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை)

இந்த உரையை கானொளியில் (YouTube) காண கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..Theme images by Jason Morrow. Powered by Blogger.