Tuesday, February 14, 2017

இறைவனின் இறுதித் தீர்ப்பு....!



February 14, 2017

வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இன்று நாடே அலசிக்கொண்டு இருக்கும்போது... இறைவனின் தீர்ப்பு குறித்தும் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. இல்லையா..?

ஒவ்வொரு வழக்கும் இருமுறை விசாரிக்கப்படும். ஆம். முதல் தடவை இவ்வுலகில். பின்னர் மறுமையில். மறுமை நாளின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு முன்னால் இவ்வுலகின் ஒவ்வொரு தீர்ப்பும் மறுபடியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அப்போது வெளிவருமே அதுதான் உண்மையான தீர்ப்பு. முழுமையான தீர்ப்பு.

இந்நேரம் ஏனோ அஷ்ஷெய்க் ராஷித் அல் கனூஷி அவர்களின் வாழ்வு நினைவில் நிழலாடுகிறது. இன்றைய தீர்ப்புக்கும் எனது நினைவலைகளுக்கும் தொடர்பு இருக்குமா தெரியாது.

அஷ்ஷெய்க் ராஷித் அல் கனூஷி அவர்கள் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு.. மரண தண்டனை விதிக்கப்பட்டு.. நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அந்நேரம் அவருக்கும் நீதிபதிக்கும் இடையே நடந்த உரையாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது.

இதோ அந்த உரையாடல்...

கனூஷி: "நீதிபதி அவர்களே! என்னுடைய இரத்தத்தைக் குடிப்பதற்கு நீங்கள் துடியாய் துடிக்கிறீர்கள். உங்கள் அவசரம் எனக்குப் புரிகிறது”.

நீதிபதி: "உங்கள் இயக்கத்திற்கும் வன்முறைக்கும் தொடர்பு இருக்கிறது”.

கனூஷி: "வன்முறையாளர் என்ற வீண்பழியைத் தவிர வன்முறைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது”.

நீதிபதி: "இவ்வளவு பெரிய இயக்கத்தை நடத்துவதற்கு பணத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?”

கனூஷி: "இஸ்லாமிய இயக்கங்களை நடத்த பணம் ஒருபோதும் மூலதனமாக இருந்ததில்லை. கொள்கைதான் மூலதனம். நானும் எனது இயக்கத்தின் முன்னணித் தலைவர்களும் எமது கடைசி உடமையைக் கூட விற்று இயக்கத்திற்கு செலவு செய்கிறோம்”.

நீதிபதி: "உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டிற்கு மரண தண்டனை என்பதை அறிந்திருப்பீர்கள். வேறு ஏதேனும் சொல்ல விரும்புகின்றீர்களா?”

கனூஷி: "அல்ஹம்து லில்லாஹ்! யா அல்லாஹ்! உனக்கு உளமார்ந்த நன்றி. நீதிபதி அவர்களே! நீங்கள் நடத்திய இந்த விசாரணையோடு இந்த வழக்கு முடிந்துவிடப்போவதில்லை. இன்னும் இரண்டு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும். ஒன்று, நாளைய தலைமுறையின் மக்கள் மன்றத்தில். அப்போது மக்கள் ஒரு தீர்ப்பை வழங்குவார்கள்.

இரண்டாவதாக, நாளை மறுமையில் நீதிபதிகளுக்கெல்லாம் மாபெரும் நீதிபதியான அல்லாஹ்வின் முன்னால் நிச்சயம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும். அல்லாஹ்வின் தீர்ப்பே நீதியானது. நிலையானது. அங்கு வானவர்களே சாட்சியாளர்களாக இருப்பார்கள்”.

பின்னர் அஷ்ஷெய்க் ராஷித் அல் கனூஷி அவர்கள் தூக்கிலப்படுவதற்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர் (1988 ஆம் ஆண்டு) தூனிசியாவின் ஜனாதிபதி சித்த சுவாதீனமிழந்ததும், ஷெய்க் கனூஷி அவர்கள் விடுதலை செய்யப்பட்டது எல்லாம் தனி வரலாறு.

உறவுகளே...! மறுமை தீர்ப்பை மறக்காதீர்கள். இறைவனின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பு எனும் நினைவு என்றும் நம் மனதில் பசுமரத்தாணி போல் இருக்கட்டும்....!

No comments :

Post a Comment

Theme images by Jason Morrow. Powered by Blogger.